வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடாவில் 1995ம் ஆண்டு ஆவணி மாதம் 2ம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக எமது பாடசாலைக்கும் தாயகத்தில் இன்னலுறும் எமது உடன்பிறப்புக்களுக்கும் இயன்றவரை
சிறப்பாகச் சேவையாற்றி வருகின்றது.
தற்போதய நிர்வாகத்தினராகிய நாம் எமது தாயக மக்களின் நீண்டகாலக் கல்விப் பாரம்பரியத்தை வலுப்படுத்தும் வகையில் எமது சங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து எமது இளைய சந்ததியினரின் கல்வி கலாச்சார முன்னேற்றத்தை இலக்காகக்கொண்டு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதனை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
தற்போது எமது சங்கம் கனடாவில் ஓர் முன்மாதிரியான சங்கமாகத் திகழ்கின்றது. இச்சங்கத்தால் அறிமுகப்படுத்தப்படும் திட்டங்கள் பிற சங்கங்களால் பின்பற்றப்படுகின்றன என்றால், தூய்மையான சிந்தனை, உயர்ந்த இலட்சியம், செம்மையான செயற்பாடு, உண்மையான உழைப்பு, சிறந்த நிர்வாகம் என்ற எமது இலக்கும்; அதை அடைய நாம் பின்பற்றுகின்ற இலக்கணமும்தான் காரணங்கள் என்பதைச் சங்கத்தின் சார்பில் கூறிக்கொள்வதில் பெருமையும் பெருமகிழ்ச்சியும் அடைகின்றேன்.
எமது கல்விப்பாரம்பரியமானது நீண்ட போராட்டம் மற்றும் அர்ப்பணிப்புக்கள் மூலம் பேணப்பட்டுப் பல தியாகங்கள் மூலம் மலர்ச்சிகண்டது. இதன் தொடர்ச்சியாக தற்போதய மாணவர்களின் கல்வி மேம்பாடு என்பது எங்கள் சமுதாயத்தின் அறிவுப்பண்பாடு சார்ந்த கனவுகள் மற்றும் சமூகத்தின் நலிந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்வதாக அமைய வேண்டும். கூடவே 21ம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதார கட்டமைப்புக்கு ஈடுகொடுப்பதாகவும் வளர்ச்சி காணவேண்டும் என்பதே என்போன்ற பழைய மாணவர்களின் அவா.
இந்த வகையில் கல்வியூடான சமுதாய தொழில் விருத்திகளோடு சமூக மற்றும் பண்பாட்டு ரீதியான மக்கள் அபிலாசைகளையும் நிறைவு செய்யும் நோக்குடன் எமது பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதனையும் தங்களுக்கு அறியத்தருகின்றேன்.