Temple                                                                     

வேலணை மத்திய கல்லூரியின்அருள்மிகு சிவகாமி சமேத நடராசப் பெருமான் ஆலயத் தோற்றமும் வளர்ச்சியும்

 

031

 

எமது கல்லூரியின் பொற்கால அதிபரான திரு. தம்பு அவர்களின் நிர்வாகத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய கரம்பொன்னைச் சேர்ந்த பொருளியல் பட்டதாரியான திரு. திருநீலகண்டம் அவர்கள் மாணவர்களின் ஆன்மிக உணர்வை வளர்க்கும் முகமாக கல்லூரி வளாகத்தில் ஓர் ஆலயம் கட்டப்படவேண்டும் என்ற தனது எண்ணத்தை வேண்டுகோளாக முன்வைத்தார். இவரது கருத்தை ஏற்றுக்கொண்ட அதிபரும் கல்லூரி நிர்வாகமும் பண்டிதர் திரு. இராமநாதர் மருதையனார் அவர்களதும் மற்றும் கல்லூரிச் சமூகத்தின் அனுசரணையுடனும் தெட்சணாமூர்த்தி ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுக் கட்டட வேலைகள் துரிதமாக நடைபெற்ற வேளை துரதிஸ்டவசமாக ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் கல்லூரிக்கான இலவச பஸ்சில் ஏறும்போது நெரிசலில் தள்ளப்பட்டு பஸ்சினால் மிதிபட்டு இறக்க நேர்ந்தது. கல்லூரி வாசலில் நடைபெற்ற துக்ககரமான சம்பவத்தால் கோயில் கட்டும் பணி இடைநிறுத்தப்பட்டது.

எனது கல்லூரிக் காலத்தில் குறிப்பாக எழுபதுகளின் இறுதிப் பகுதியில் மணல் தரைகொண்ட ஆலயமண்டபத்தில் சங்கீத வகுப்புகள் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்த 1975ஆம் ஆண்டிலிருந்து 10ஆம் வகுப்பு வரை (1979) ஆலய முன்றலில் நடைபெற்ற சங்கீத வகுப்புகளில் முழுமையாகப் பங்குபற்றிய நினைவலைகள் இன்றும் என் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கின்றன.

எண்பதுகளின் ஆரம்பத்தில் இந்தக் கோயிலைக் கட்டிமுடித்து நடராஜப் பெருமான் சிலையைக் கொண்டுவந்து கும்பாபிஷேகம் செய்யவெண்டும் என்ற பெருநோக்கம் கல்லூரியின் அதிபர் ஆசிரியர்களிடத்திலும் பொது மக்களிடத்திலும் இருந்துகொண்டே வந்தது. அவர்கள் முயற்சிக்கும் போதெல்லாம் ஏதோவொரு தடை ஏற்பட்டுக்கொண்டேயிருந்தது. இருந்தபோதும் 1983ஆம் ஆண்டு அதிபராகப் பொறுப்பேற்ற திரு. சிவராஜரட்ணம் அவர்கள் மிகவும் மென்மையானவர்; எவருடனும் தேவையற்ற விவாதம் செய்யாதவர்; ஆனால், காரியங்களைக் கச்சிதமாக முடிப்பதில் வல்லவர்; தெய்வபக்தி மிக்கவர்.

இவரது குணாதிசயங்களை நன்குணர்ந்த எமது கல்லூரியின் பழைய மாணவியும் நீண்டகால ஆசிரியையுமான திருமதி. வேதவல்லி அரசரட்ணம் (முத்தையா ரீச்சர்) அவர்கள் தங்கள் ஆசிரியர் குழுவின் கோயில் திருப்பணி பற்றிய நீண்டகால விருப்பத்தை அதிபரிடம் விளக்கமாக வரலாற்றுக் காரணிகளுடன் எடுத்துரைத்தார். இவர்களது அறஞ்சார்ந்த நோக்கத்தை நன்கு புரிந்துகொண்ட அதிபர் திரு. சிவராஜரட்ணம் அவர்கள் துறைசார்ந்த அறிஞர்களிடமும் பிரதி அதிபர் பண்டிதர் இராசையா, சிரேஸ்ட ஆசிரியர்கள் திரு. ஈ. கே. நாகராசா, திரு. பொ. கேதாரநாதன், திரு. செ. வரதலிங்கம், திருமதி. வேதவல்லி அரசரட்ணம், செல்வி. ஏ. கந்தையா ஆகியோருடன் கலந்துரையாடிய போது இத்திருப்பணிக்கான நிதியுதவியை எவ்வாறு பெறுவது என வினவினார். அதற்குப் பதிலளித்த ஆசிரியர் குழுவினர் தாங்கள் ஒவ்வொருவரும் ரூபா 1000 நன்கொடையாக வழங்குவதென்ற தங்கள் ஏகமனதான முடிவை அறிவித்தபோது அதிபர் மகிழ்ச்சிபொங்க "அப்படியானால் இலகுவாகச் சாமியைக் கொண்டுவந்து வைத்துவிடலாம்" என்று கூறி தனது சம்மதத்தைத் தெரிவித்தபோது கல்லூரியின் ஆசிரியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.

அதிபர் ஆசிரியர்களின் கலந்தாலோசனையின் விளைவாக திரு. பொ. கேதாரநாதன் தலைமையிலான மூவர்கொண்ட திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. மற்றைய இருவரும் திரு. ஈ. கே. நாகராசா மற்றும் திரு செ. வரதலிங்கம் ஆகியோராவர். இந்த மூவரும் கல்லூரிச் சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பு மிக்கவர்கள். இவர்களது இடைவிடாத முயற்சியின் பயனாகவும் கல்லூரியின்பால் அக்கறையுள்ள பொதுமக்களின் உதவியுடனும் ஆலயத் திருப்பணி வேலைகள் பூர்த்தியாகின. ஆலயத்தின் முடிக்கான செலவைப் பண்டிதர் மருதையனார் அவர்கள் வழங்கியதாக அறிகின்றேன். தற்போது எழுந்தருளியிருக்கும் சிவகாமி சமேத நடராசர் சிலைகள் திரு. ஈ. கே. நாகராசா அவர்களது நேரடிக் கண்காணிப்பில் யாழ்நகரில் ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்டுப் பின்னர் உழவு இயந்திரத்தில் வேலணைப் பிரதேசம் முழுவதும் உயர்தர வகுப்பு மாணவர்களால் வீதி உலாக் கொண்டு வரப்பட்டுப் பின்னர் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றமை எமது கல்லூரியின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய விடயங்களில் ஒன்றாகும்.

temple

கடந்த நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் (1997-2001) அதிபராகக் கடமையாற்றிய திரு. கு. கணேசலிங்கம் அவர்கள் 1992 இடப்பெயர்விற்குப் பின்னர் 1998 முதல் எமது கல்லூரியை மீண்டும் சொந்தக் கட்டிடங்களில் இயங்க வைத்து 1999 இல் பொன்விழாக் கொண்டாடிய பெருமைக்குரியவர். இன்றும் அறவழியே தன்வழியென்று வாழ்வதோடு கல்லூரியின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்தும் தன்னலமற்ற தொண்டாற்றி வருபவர். இவரது நிர்வாகத்தில் அப்போதய யுத்தச் சூழ்நிலையில் மிகக்குறைவான நிதிவளத்துடன் ஆலயத்தின் முன்மண்டபம் விரிவாக்கப்பட்டுக் கும்பாபிசேகம் நடைபெற்றமை பாராட்டுக்குரிய விடயமாகும்.

vcctemple_old

மேலும் கல்லூரியின் இடப்பெயர்வு காரணமாகப் போதிய பராமரிப்பு இல்லாமையும் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறவேண்டிய புனருத்தாரண வேலைகள் முழுமையாக நடைபெற முடியாமையின் காரணமாக ஆலயத்தின் கட்டடத்திற்குள் வெடிப்புகள் ஏற்பட்டு கற்பக்கிரகத்துக்குள் ஒழுக்குகள் ஏற்படக் காரணமாகியது. 2011ஆம் ஆண்டு கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்ற மண்ணின் மைந்தன் திரு. சி. கிருபாகரன் அவர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இக்குறைபாட்டை எப்படியாவது நிவர்த்தி செய்யவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் தொடர்ந்து உருவாகியதன் பயனாக எமது கல்லூரியின் பழைய மாணவியும் முன்னாள் பிரதி அதிபருமான திருமதி. கேதாரநாதன் அவர்களிடம் தனது வேண்டுகோளை முன்வைத்தார். திருமதி. கேதாரநாதன் அவர்கள் நீண்டகாலமாக இந்த ஆலயத்தின் பரிபாலனத்திற்குத் தேவையான நிதியை ஆலயத்தின் அறங்காவலர் சபையின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது மதிப்பிற்குரிய ஆசிரியை திருமதி. கேதாரநாதன் அவர்கள் தலைமையில் அதிபர் திரு. கிருபாகரன் தொழிலதிபரும் பழைய மாணவருமாகிய திரு. கந்தையா ரவீந்திரன் ஆகியோருடன் அடியேனும் இணைந்து ஒரு குழுவாக இயங்கி வெளிநாடுகளிலும் உள்நாட்டிலுமுள்ள கருணை உள்ளங்கொண்ட பழைய மாணவர்களின் நிதியுதவியுடன் திட்டமிட்டபடி இப்பெருங் கைங்கரியத்தை நடாத்தி முடிப்பதற்கு அந்த சிவகாமி சமேத நடராசப்பெருமான் திருவருள் பாலித்தமையை நினைக்கும்போது எனது உடம்பு புல்லரிக்கின்றது. அதுமட்டுமல்ல, இந்தத் திருப்பணி மூலம் ஒரு விடயம் நன்றாகப் புரிகின்றது. நாம் எந்தவொரு செயற்பாட்டையும் தூரநோக்குடனும் தூய எண்ணத்துடனும் மேற்கொள்கின்றபோது எமக்கு மேலானதாகவுள்ள சக்தி எம்மை வழிநடாத்தும். அந்தக் காரியம் எதுவித தடங்கலுமின்றி நிறைவேறும் என்பதாகும். இதற்குத் தலைமைத்துவம் சரியானதொரு வழிகாட்டலை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் எமது அதிபர் திரு. கிருபாகரன் அவர்களது தெய்வ பக்தியும் ஆன்மீக உணர்வும் எந்தக் காரியத்தையும் துணிந்து செய்து முடிக்கும் ஆற்றலும் விடாமுயற்சியும் எமது பழைய மாணவர் சமூகத்தின் நம்பிக்கையை மேலும் பன்மடங்கு உயர்த்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.

024

 

030

நிறைவாக இத்திருக்கோவிலைக் கட்டிமுடிக்க வேண்டுமென்று ஆரம்பம் முதல் அயராது உழைத்த எங்கள் மதிப்புமிக்க ஆசிரியை திருமதி. வேதவல்லி அரசரட்ணம் அவர்கள் கும்பாபிஷேகத்தன்று முழுமையாகப் பங்குபற்றிச் சிவனருள் பெற்றதோடு மதியம் வழங்கப்பட்ட அன்னதானத்திலும் பங்குபற்றி மகிழ்ந்தமை எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிதரும் விடயமாகும்.

temple1

மேலும் இத்திருப்பணிக்குப் பல வழிகளிலும் உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் குறிப்பாக அன்னதானம் வழங்கிய முன்னாள் அதிபர் திரு. கு. கணேசலிங்கம் அவர்களின் அரும்பணிக்கும் எமது குழுவின் சார்பில் கோடானுகோடி நன்றிகள் உரித்தாகட்டும்.

064

மதிப்பிற்குரிய பெரியோர்களே! அன்பான மாணவச் செல்வங்களே! நாம் அன்பும் அறமும் சார்ந்தவர்கள். எமது வாழ்க்கை அன்பின் அடிப்படையிலும் அறத்தின் அடிப்படையிலும் இயங்க வேண்டும் என்று உலகத்திற்கே உணரத்தியவர்கள் நாம். அந்த வழியில் எமது எதிர்காலச் சந்ததியினரும் அன்பும் அறமும் சார்ந்தவர்களாக வாழ இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு சிவகாமி சமேத நடராசப் பெருமான் அருள்புரிவாராக.

"ஈண்டு நாம் யாரும் இசைந்தொன்றி நின்றிடுதல் வேண்டும்."

பணிவுடன்

 

சி.இளஞ்செழியன் (தலைவர்)

வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா

பழைய மாணவன் (1975-1982)

 
Home    |    Membership    |    Photo Gallery    |    Committee    |    About Us    |    Contact Us
2009 © VCCOSA Canada